உருவானது டிட்வா புயல்; நவம்பர் 30-ல் கரையை கடக்க வாய்ப்பு


உருவானது டிட்வா புயல்; நவம்பர் 30-ல் கரையை கடக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2025 3:23 PM IST (Updated: 27 Nov 2025 4:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கொழும்பு,

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டிட்வா புயல் இன்று உருவாகி உள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று (26-11-2025) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் வலுப்பெற்று, இன்று (27-11-2025) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று அதே பகுதிகளில், இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் இன்று புயல் உருவாகி உள்ளது. அதற்கு டிட்வா என பெயரிடப்பட்டு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வருகிற 30-ந்தேதி அது கரையை கடக்கும்.

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story