வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகருமா?

காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்தார்.
சென்னை,
தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (புதன்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகிறது. இது மேலும் வலுவடைந்து நாளை (வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வட இலங்கையையொட்டி திரிகோணமலை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கிறது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் நிலப்பரப்பு ஊடுருவலை விட்டு அகன்று தமிழக பகுதிகளை நோக்கி நகரும்போது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது வரை அதற்கான சூழலே இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு காரணமாக நாளை இரவில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் எனவும், நாளை மறுதினமும், அதற்கடுத்த நாளும் (சனிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங்களிலும், 29, 30-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
தெற்கு ஆந்திரா நெல்லூர் முதல் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அதிராம்பட்டினம் வரையில் நல்ல மழையை கொடுக்கக் கூடிய சலனமாகவே இது இருக்கும் என்றும், புயலாக உருவாகும் பட்சத்தில் சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கவே தற்போது வரை வாய்ப்புள்ளது என்றும், அதுபற்றி ஓரிரு நாட்களில் துல்லியமாகஅறிந்துகொள்ளலாம் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.






