சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!


சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா புயல்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!
x

‘டிட்வா' புயல் காரணமகா இன்று டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்க உள்ளது.

சென்னை,

‘டிட்வா' புயல்

‘டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும் நேற்று மாலை வரை நிலைகொண்டு இருந்தது.

இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (சனிக்கிழமை) காலை அடையும். பொதுவாக காற்றின் சுழற்சி 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வேகத்தில் இருந்தால் அது புயலாக கணக்கில் கொள்ளப்படும். தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்சி இருக்கிறது.

இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். அதாவது புயல் தன்னுடைய சக்தியை புதுப்பித்துக்கொண்டு பயணிக்கும் என சொல்லப்படுகிறது.

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை

மேலும் டெல்டா கடற்கரையை நெருங்கும்போது பசிபிக் உயர் அழுத்தம் காரணமாக புயல் மிகவும் மெதுவாக நகரவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த நேரத்தில் புயலின் மேற்கு பகுதி அதாவது முன் பகுதி காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொட இருப்பதாகவும், அது முழுமையாக கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் கூறினார்.

சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று அதன் நகர்வை பொறுத்து, அது எங்கே கரையை கடக்கும்? என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடதமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு

இந்த புயல் காரணமாக டெல்டாவில் இன்றும், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வட தமிழகம்

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story