வங்கக்கடலில் உருவாகும் புயல்.. சென்னைக்கு 29-ந் தேதி ‘ஆரஞ்சு’ அலர்ட்

கோப்புப்படம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை,
சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
நேற்று முன் தினம் (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
நேற்று முன் தினம் (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக இன்று (25-11-2025), குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவியது.
இதன்காரணமாக இன்று (25-11-2025): கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரே சமயத்தில் நிலவும் 3 சுழற்சிகளால், நாளை (புதன்கிழமை) வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘சென்யார்' என்றால் அரபு மொழியில் சிங்கம் என்று அர்த்தம் ஆகும். தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் சென்னைக்கு 29-ந்தேதி மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் அமுதா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘29-ந்தேதி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த அளவு மழை பதிவாகி உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு வருகிற 29-ந் தேதி வரையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ’ என்று தெரிவித்திருந்தார்.






