டிட்வா புயல்... பெயர் வர காரணம் என்ன?

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டிட்வா புயல் இன்று உருவாகி உள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று (26-11-2025) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் வலுப்பெற்று, இன்று (27-11-2025) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று அதே பகுதிகளில், இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் இன்று புயல் உருவாகி உள்ளது. அதற்கு டிட்வா என பெயரிடப்பட்டு உள்ளது.
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் நகர்ந்த 'சென்யார்' (Senyar) புயல் உருவான அதே சமயத்தில், டிட்வா புயலுக்கான இந்த அமைப்பும் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வானிலை ஆய்வு மையம் சார்பில் டிட்வா (Ditwah) புயல் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு புயல் உருவாகும்போது அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அதனை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாடு பரிந்துரைக்கும். அந்த வகையில், டிட்வா புயல் பெயர் மற்றும் அதற்கு அந்த பெயர் சூட்டுவதற்கான காரணம் உள்ளிட்டவை பற்றிய தகவல் வெளிவந்து உள்ளது.
டிட்வா (Ditwah) என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. இது உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா.வின் எஸ்காப் வெப்பமண்டல புயல்கள் குழுவால் உருவாக்கப்பட்ட முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளது. "டிட்வா" அல்லது "டெத்வா" (Detwah) என்பது ஏமனில் உள்ள சோகோட்ரா தீவில் (Socotra) உள்ள ஒரு காயலை (Lagoon) குறிக்கிறது. இந்த காயல் என்பது கடலில் இருந்து மணல்பாங்கான அல்லது பாறைகளால் துண்டிக்கப்பட்ட பகுதியாக இருக்கும்.






