இவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை!


இவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை!
x

விண்வெளியில் செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த நாடுகளின் பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.

சென்னை,

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வியத்தகு சாதனைகளை எட்டியுள்ளது. இப்போது விண்வெளியில் இந்தியாவுக்கு சொந்தமான இஸ்ரோ நிறுவன விஞ்ஞானிகள் தயாரித்த 53 செயற்கைகோள்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இந்த செயற்கைகோள்கள் பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, வழிகாட்டும் பணிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக விண்ணில் இருந்து செயலாற்றுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி 60 ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள்கள் விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் ஆரம்பத்தில் 50 கி.மீ. இடைவெளியில் சுற்றிக்கொண்டிருந்தன. ஒரே சுற்றுப்பாதையில் 2 செயற்கைகோள்களையும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் மூலம் ஒன்றாக இணைப்பதற்காக இடைவெளியை விஞ்ஞானிகள் குறைத்துக்கொண்டே வந்தனர். இந்தநிலையில், கடந்த 7-ந்தேதி மற்றும் 9-ந்தேதி ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றிவந்ததால், வேகத்தை குறைக்க இயலவில்லை.

இதனால், 3 முறை இந்த இணைப்பு பணியை தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் ஒத்திவைத்தனர். இறுதியில், வேகத்தை கட்டுப்படுத்தும் பணியில் வெற்றிபெற்று இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, நேற்று காலையில் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளியில் செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 4-வது நாடாக இந்தியாவும் இப்போது அதில் இணைந்திருக்கிறது. இதன் மூலம் வருங்காலங்களில் விண்வெளியில் நாம் அமைக்க இருக்கும் தனி விண்வெளி நிலையத்தை விரைவில் அமைத்துவிட முடியும்.

அதேபோல, இந்த ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டம் மூலம் நிலவில் இருந்து கல், மண், பாறைகள் போன்றவற்றை பூமிக்கு கொண்டுவரும் முயற்சியிலும் இந்தியா வெற்றி பெற முடியும். பல திட்டங்களுக்கு இந்த தொழில் நுட்ப அறிவு நமக்கு உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைகோள் இணைப்பில் முக்கிய பங்காற்றிய, அதாவது ராக்கெட்டை ஏவுவதற்கு முக்கிய காரணமான உந்துவிசை சக்தி மைய இயக்குனர் வி.நாராயணன் திருவனந்தபுரத்தில் இருந்தார். கடந்த 14-ந்தேதிதான் இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித்துறை செயலாளராகவும், விண்வெளி ஆணைய தலைவராகவும் பதவியேற்றார்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் படித்தார். அவர் 9-ம் வகுப்பு படிக்கும் வரை அவருடைய கிராமத்தில் மின்சார வசதிகூட இல்லாததால், அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வேலைக்கு போய் சம்பாதித்து, தபால் வழியே என்ஜினீயரிங் படித்து இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்து தொடர்ந்து ஐ.ஐ.டி. கோரக்பூரில் முதுகலை பட்டம் பெற்று வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார்.

இஸ்ரோவில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட வி.நாராயணன் தொழில் நுட்ப உதவியாளராக சேர்ந்து இன்று இஸ்ரோவின் உச்சபட்ச பதவிக்கு வந்துள்ளார். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இவரது பங்களிப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ள வி.நாராயணனின் ஆரம்பம் எப்படி இருந்தாலும், கடும் உழைப்பினால் சிகரத்தை எட்ட முடியும் என்பதற்கு அவரே சிறந்த எடுத்துக்காட்டு.


Next Story