திருச்செந்தூர் கோவிலில் வாலிபர்கள் அத்துமீறல்: குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டனர்

சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 6 பேர் கொண்ட வாலிபர்கள் குழுவினர் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் வைத்து அத்துமீறி பட்டப்பகலில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் பக்தர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் இதுபோல் இளைஞர்கள் ‘ரீல்ஸ்’ எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஆன்மிகத்தின் புனிதத்தை கெடுத்து வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






