அதிர்ச்சி சம்பவம்: வாலிபர் வெட்டிக்கொலை.. பள்ளி மாணவர்கள் வெறிச்செயல் - வெளியான பரபரப்பு தகவல்கள்


அதிர்ச்சி சம்பவம்: வாலிபர் வெட்டிக்கொலை.. பள்ளி மாணவர்கள் வெறிச்செயல் - வெளியான பரபரப்பு தகவல்கள்
x

கொலையுண்ட வெங்கடேஷ்

தினத்தந்தி 7 Sept 2025 3:48 AM IST (Updated: 7 Sept 2025 5:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் எதிரே வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி


நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19). பெற்றோர் இறந்து விட்ட நிலையில் வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். சமீபகாலமாக டவுனில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கி இருந்து வாட்டர் கேன் வினியோகம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேஷ் தனது நண்பர்கள் சிலருடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கடைக்கு, டீக்குடிக்க வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் வந்தனர். இதைக்கண்ட அவர் மற்றும் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து ஓடிய வெங்கடேசை மட்டும் சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அதில் டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களை நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.

கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இசக்கிராஜா தரப்பினரின் மோட்டார் சைக்கிளும், வெங்கடேசின் மோட்டார் சைக்கிளும் மோதி உள்ளன. இதுதொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால், இசக்கிராஜா தரப்பினர் அந்த முன்விரோதத்தில் வெங்கடேசின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் நெல்லை சந்திப்பு பகுதிக்கு சென்றதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு போட்டி தேர்வுக்காக தனியார் அகாடமி படித்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இசக்கிராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story