கட்சி தொடங்கியதுமே ஆட்சியை பிடிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி பதிலடி

உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள் என்று விஜய்யை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்தார்.
காஞ்சிபுரம்,
மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம் எழுச்சிப் பயணம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரத்தில் இன்று உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களெல்லாம், எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி தான் புதிய கட்சியை தொடங்க முடியும்.மக்களுக்காக எம்.ஜி.ஆர். செய்த சேவை, உழைப்பு, திட்டங்கள், அதனால் மக்கள் பெற்ற நன்மைகள் தான் இதற்கு காரணம்.ஒரு மரம் எடுத்த உடன் பலன் தருவது இல்லை. முதலில் செடியை நடுவோம். அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பராமரிக்க வேண்டும். உரமிட வேண்டும். அது மெல்ல மெல்ல பெரிதாகி மரமாகி பூத்து, காய்த்து கனி கொடுக்கும்.
அப்படித்தான் எந்தவொரு இயக்கமும் உருவாக முடியும். எடுத்த உடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்து விட முடியாது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி 5 ஆண்டு காலம் தனது உழைப்பை மக்களுக்கு கொடுத்து ஆட்சியை பிடித்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான். எடுத்த உடனே முதல்-அமைச்சர் ஆகவில்லை.நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு அ.தி.மு.க. என்ற இயக்கத்தை அடையாளம் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.அண்ணா எடுத்த உடனே முதல்-அமைச்சர் ஆகவில்லை. தனது வாழ்க்கையில் பல பேராட்டங்களை சந்தித்தார். மொழிக்காக சிறை சென்றார்.பல ஆண்டுகாலம் மக்களுக்கு உழைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று அதன்மூலமாக தான் இவர்கள் முதல்-அமைச்சர் ஆனார்கள்.
சில பேர் கட்சி ஆரம்பித்ததும் இமாலய சாதனை படைத்தது போன்று நினைக்கிறார்கள். சினிமாவில் பேசுவது போன்று 'டயலாக்'(வசனம்)பேசுகிறார்கள். நாங்களெல்லாம் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.தொழில் செய்தாலும், விவசாயம் செய்தாலும் உழைத்தால் ஏற்றம் பெறலாம். அரசியலை பொறுத்தமட்டில் மக்களுக்கு சேவை செய்து உழைத்தால் ஏற்றம் பெறலாம். இதுவும் அ.தி.மு.க.வில் தான் சாத்தியம். வேறு எந்த கட்சியிலும் முடியாது.
சில பேர் ஏதோ மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றது போன்றும், இந்த நாட்டுக்காக உழைத்தது போன்றும் நினைக்கிறார்கள். அவர்கள் வந்து தான் இந்த நாட்டை காப்பாற்றுவது போன்று அடுக்குமொழியில் பேசி வருகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்கள் புரிந்து கொண்டிப்பீர்கள் என கருதுகிறேன்.
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அவர்கள் இதுவரை சாதித்தது என்ன? என்பதை பார்க்க வேண்டும். எந்த கட்சியும் எடுத்த உடனே ஆட்சிக்கு வந்தது கிடையாது. உழைப்பை கொடுத்து மக்களிடம் நம்பிக்கையை பெற்றார்கள். மக்கள் மனதிலே அவர்களுக்கு இடம் கிடைத்தது.இதன்மூலம் அவர்களால் முதல்-அமைச்சராக வர முடிந்தது. நாங்கள், பல்வேறு திரைப்படங்களில் நடித்து அந்த திரைப்படத்தின் மூலமாக கிடைத்த வருமானத்தை பெற்று ஓய்வு பெற்ற காலங்களில் அரசியல் கட்சிக்கு வந்தவர்கள் அல்ல.”என்றார்.
மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் அதிமுகவையும் விஜய் கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.