ரெயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்... தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் மீது பெண் ஒருவர் ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதி உள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரெயில்களை கழட்டி இழுத்து செல்ல உதவும் ரெயில் என்ஜின் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த என்ஜின் மீது திடீரென பெண் ஒருவர் ஏறி நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தார். இருட்டில் அவர் மின்சாரத்தில் அடிபட்டு இறந்தாரா? என சந்தேகத்தில் ஏராளமானவர்கள் அந்த பகுதியில் கூடினர். இதனால் ரெயில்வே சுரங்க மேம்பால பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று ரெயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்ணை இழுத்து கீழே இறக்கினர். சுமார் 40 வயதுடைய அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.