நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் நிரந்தரமாக இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு


நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் நிரந்தரமாக இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
x

நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை -மேட்டுப்பாளையம்

நெல்லை சந்திப்பில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06020) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 6.25 மணிக்கு கோவைக்கும், 7.30 மணிக்கு மேட்டுப்பாளையமும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து (வண்டி எண் 06029) திங்கட்கிழமை தோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.

இந்த ரெயில் சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், மதுரை, பழனி கோவை வழியாக செல்கிறது. இந்த ரெயிலில் பயணிகள் பழனி, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள்.

நேற்று இரவு புறப்பட்ட இந்த ரெயிலில் நெல்லையில் இருந்து 192 பேர், சேரன்மாதேவி 2 பேர், கல்லிடைக்குறிச்சி 7 பேர், அம்பை 41 பேர், கீழக்கடையம் 24 பேர், பாவூர்சத்திரம் 30 பேர், தென்காசி 101 பேர், கடையநல்லூர் 7 பேர், சங்கரன்கோவில் 59 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதுதவிர பொது பெட்டிகளிலும் பலர் பயணம் செய்து உள்ளனர். இதில் கோவையில் மட்டும் 549 பேர் இறங்கி உள்ளனர்.

நீட்டிக்கப்படுமா?

சிறப்பு கட்டண சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில் நேற்றுடன் இறுதி பயணத்தை நிறைவு செய்வதாக இருந்தது. இந்த நிலையில் ரெயில்வே வாரியம் இந்த டிசம்பர் மற்றும் வருகிற ஜனவரி ஆகிய 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் பழனி, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரெயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து நீட்டிப்பு மட்டுமே செய்து வரப்படும் இந்த ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் வாரத்தில் 3 நாட்களாவது நெல்லை -மேட்டுப்பாளையம் இடையே ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1 More update

Next Story