அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி செல்வது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்


அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி செல்வது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
x

ஒரே நாடு ஒரே தேர்தலில் என்னென்ன நன்மை உள்ளது என விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை,

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில், பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கான பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு திண்டுக்கல்லில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில், வரியை உயர்த்திய பின்னர், அதனை குறைத்ததாக சரித்திரம் இல்லை.

வரும் காலங்களில், தேர்தலுக்காக திமுக அரசு சொத்துவரி, மின்சார கட்டணம் போன்றவற்றை குறைத்தாலும் குறைக்கலாம். ஜி.எஸ்.டி. என்பது மத்திய நிதி மந்திரி மட்டும் எடுக்கும் முடிவு கிடையாது. எல்லா மாநில நிதி மந்திரிகளும் சேர்ந்து எடுக்கும் முடிவு. ஜி.எஸ்.டி.யில் மாநில அரசுக்கு சம்பந்தம் இல்லை என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தமிழக அரசை தவிர அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அதிமுகவில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என அடுத்தடுத்து பலரும் டெல்லி செல்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களை சந்திக்கின்றனர். அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அனைவரும் டெல்லி சென்று தலைவர்களை சந்திக்கின்றனர். திமுகவில் அந்த ஜனநாயகம் இல்லை.

ஒரே நாடு ஒரே தேர்தலில் என்னென்ன நன்மை உள்ளது என விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அரசு பணம் செலவாவதை குறைக்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். 5 வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களுக்காக பெரும் பணம் செலவாகிறது. விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதிகூட, நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யை படித்து பார்க்கச் சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story