ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன? சென்னை எம்.டி.சி அறிவிப்பு


ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?   சென்னை எம்.டி.சி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2025 1:28 PM IST (Updated: 2 July 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்( எம்.டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது 1,225 மின்சார தாழ்தள பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதில், முதல் கட்டமாக 625 மின்சார தாழ்தள பஸ்களுக்கான ஒப்பந்தமானது ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டு, 120 மின்சார தாழ்தள பஸ்களுக்கான சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வியாசர்பாடி பணிமனையில் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக இயக்கப்பட உள்ள 625 மின்சார தாழ்தள பஸ்களில் 225 ஏ.சி. பஸ்கள் ஆகும். இவை பெரும்பாக்கத்தில் இருந்து 55, பல்லவன் சாலையில் அமைந்துள்ள மத்திய பணிமனையில் இருந்து 100, தண்டையார்பேட்டை-1 பணிமனையில் இருந்து 25, பூந்தமல்லி பணிமனையில் இருந்து 45 ஏ.சி. பஸ்கள் என பிரித்து இயக்கப்பட உள்ளன.

இதேபோல, 2-வது கட்டமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் 600 மின்சார தாழ்தள பஸ்களில் 400 ஏ.சி. பஸ்களும், 200 ஏ.சி. அல்லாத பஸ்களும் அடங்கும். இந்த 400 ஏ.சி. பஸ்களும் ஆலந்தூர் பணிமனையில் இருந்து 80, மத்திய பணிமனை 2-ல் இருந்து 80, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து 40, பெரம்பூர் பணிமனையில் இருந்து 80, ஆவடியில் இருந்து 60, அய்யப்பன் தாங்கலில் இருந்து 60 ஏ.சி. பஸ்கள் என்று பிரித்து இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட தகவல்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story