அதிரும் அரசியல் களம்: விஜய்யுடன் நாங்கள் சேர்ந்தால் என்ன..? - டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி


அதிரும் அரசியல் களம்: விஜய்யுடன் நாங்கள் சேர்ந்தால் என்ன..? - டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2025 5:09 AM IST (Updated: 7 Sept 2025 5:23 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என்றும், விஜய்யுடன் நாங்கள் சேர்ந்தால் என்ன? எனவும் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரை

மதுரையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்ற தேர்தல், வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறி இருக்கிறோம். தேவை இருந்தால்தான் டெல்லியில் உள்ள தலைவர்களை சந்திப்பேன். விளம்பரத்திற்கு பூங்கொத்து கொடுக்கமாட்டேன்.

ஏப்ரல் மாதம் அமித்ஷா சென்னையில் பேசியபோது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை இணைப்பீர்களா? என்ற கேள்விக்கு, அப்போது உட்கட்சி விவகாரம் என பதில் அளித்தார். அது நல்ல பதில். அமித்ஷா கூறும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்திற்கு தலைவராக அண்ணன் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என கூறினார். அவர் அண்ணன்தான். பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும், அவர் எனக்கு அண்ணன்தான். அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சர் வேட்பாளர் என கூறினார்.

நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பயணிப்போம் என 2 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என அமித்ஷா பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், அது அவர்களுக்கு சாதகமாகவும், எங்களுக்கு பாதகமாகவும் அமைந்தது. யாரை எதிர்த்து, எதனை எதிர்த்து கட்சி ஆரம்பித்தேன் என்பது மக்களுக்கு தெரியும். அதற்கு எதிரான ஒரு முடிவை தொண்டர்கள் அனுமதிப்பார்களா, நிர்வாகிகள் அனுமதிப்பார்களா?

அண்ணாமலை

கூட்டணி குறித்து சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்லவில்லை. அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை சரியாக கையாண்டார். அவர் கூட்டணிக்கு எங்களை கொண்டும் வந்தார். ஆனால் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை. அவர் நல்ல நண்பர்தான். இதேபோல் அண்ணாமலைக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் வெளிப்படையாக இருந்தார். தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது, எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நடவடிக்கை அ.ம.மு.க.வுக்கு சரியாக இருக்காதே என நினைத்தோம். நினைத்தது போலே ஆகிவிட்டது. கூட்டணியில் இருந்து விலகியபோது அண்ணாமலை என்னிடம் பேசினார்.

பிரதமர் தூத்துக்குடி வந்த சமயத்தில், அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனிடம் அனுமதி கேட்டுள்ளார். அந்த விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் ஆணவமாக பதிலளித்தார். அந்த ஆணவத்திற்கு நானோ, ஓ.பன்னீர்செல்வமோ கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. கூட்டணி விஷயத்தில் டிசம்பர் மாதம் வரை பொறுக்கலாம் என நினைத்தோம். ஆனால், தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், கூட்டணியில் இருந்து வெளியேறினோம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது, அ.தி.மு.க.வுக்கு நல்லது. அங்குள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் இதற்கு பின்னரும் விழித்து கொள்ளவில்லை என்றால், ஆட்சிக்கு வருவது கனவாகவே போகும். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சொல்வது போல மூத்த நிர்வாகிகள் கூறுவதை கேட்க வேண்டும். செங்கோட்டையன் இப்போது பேசுகிறார் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். 2026 தேர்தலில் எங்கள் கட்சிக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்றை தேர்வு செய்வோம். உறுதியாக ஆட்சி அமைக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்போம். அ.ம.மு.க. நிச்சயமாக வெற்றி முத்திரை பதிக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் என 3 பேரும் ஒன்றாக பயணிக்க வாய்ப்புள்ளதா என்கிறீர்கள். நண்பர்களான நாங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். ஆனால், நீங்கள் நினைக்கும்போது சேர வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் இடர்பாடு எது என்பது டெல்லிக்கு தெரியும். எதை சரிசெய்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.ம.மு.க. வரும் என்றும் தெரியும். டெல்லி சொல்லி எங்களை சரி செய்துவிடும் என அவர்கள் நம்பினால், இந்த முறையும் ஏமாந்துபோவார்கள். நாங்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றால், அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மாற வேண்டும்.

விஜய்யுடன் கூட்டணி?

நாங்கள் இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தி.மு.க.வுடனும், சீமானுடனும் கூட்டணி இல்லை. அரசியலில் எதுவும் நடக்கும். புதிய கூட்டணி அமையும். விஜய்யுடன் கூட்டணி போனால் என்ன? அவர் தலைமை தாங்கக்கூடாதா? விஜய்யை குறைத்து பேசக்கூடாது” என்று கூறினார்.

விஜய்யுடன் கூட்டணி சேர்வது குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.

1 More update

Next Story