கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன...?


கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன...?
x

கோவை செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை இருந்தது. இந்த சிறை வளாகத்தில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பூங்கா அமைக்கும் பணியை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க இருக்கும் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும், மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்கு அளிக்கும் வகையிலும் உலக தரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்னென்ன:-

பூங்காவின் மெயின் நுழைவு வாயிலில் உள்ளே சென்றதும் மரத்தின் இலைகள் போன்ற தோற்றத்தில் கான்கிரீட் அமைக்கப்பட்டு அதன்மீது வண்ண பூக்களுடன் கூடிய சிறிய செடிகள் நடப்பட்டு உள்ளன. அதை கடந்ததும் செயற்கை மலைக்குன்றுகள் அமைக்கப்பட்டு, நீர் வீழ்ச்சி விழுவது போலவும், வன விலங்குகள் நடமாடுவது போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பார்வையாளர்கள் இதனுள் நுழைந்து செல்லும்போது புதிய அனுபவத்தை பெற முடியும்.

அதை கடந்து உள்ளே சென்றதும் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் தேர் வடிவமைக்கப்பட்டு அதில் தேரை முல்லை கொடிகள் படர்ந்து உள்ளதுபோன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே பகுதியில் கடையேழு வள்ளல்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

பூங்காவை வண்ணமயமாக மாற்றும் வகையிலும், வரலாற்று சிறப்புகளை அறியும் வகையிலும் செம்மொழி வனம், ஐந்திணை வனம், ஆரோக்கிய வனம், பாறை வனம், பூஞ்சோலை, மூங்கில் கார்டன், நீர்வனம், நறுமண தோட்டம், மகரந்த வனம், மூலிகை பூங்கா, திறந்தவெளி அரங்கம், குழந்தைகளின் கண்டுபிடிப்பு திறனை மேம்படுத்தும் புதிர்தோட்டம் இடம் பெற்று உள்ளன.

இதுதவிர 1,000 வகையான ரோஜா செடிகள் இடம் பெற்று உள்ளன. பூங்கா வளாகத்தில் விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், உணவுக்கூடம், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி, குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பூங்காவின் ஒரு பகுதியில் பலவிதமான கற்றாழைகள் நடப்பட்டுள்ளன.

அதேபோல் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து, அரிய வகை மரங்கள் கொண்டுவரப்பட்டு செம்மொழி பூங்காவில் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த மரங்கள் சுற்றுச்சூழலை பேணி காப்பதுடன், பல வண்ண பூக்கள் இந்த மரங்களில் பூக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது சிறப்பு அம்சமாகும். சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தாவரங்களும் உள்ளன.

தாமரை, அல்லி உள்பட தண்ணீரில் வளரும் தாவரங்களும் உள்ளன. இயற்கையுடன் கை கோர்த்து செல்லும் வகையில் 5 லட்சம் தாவரங்கள் நடப்பட்டு உள்ளன. அத்துடன் நடுவில் செயற்கை நீர் ஊற்று அதன் அருகே பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

அதுபோன்று சிறுவர்களுக்கான விளையாட்டுகள், நீண்ட புல் தரை, பொதுமக்கள் அமர்வதற்கு பல்வேறு இடங்களில் இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லவும் வசதி உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பங்களுடன் கூடிய விளையாட்டுகளும் உள்ளன. பூங்காவில் செடி, கொடிகள், மரங்களுக்கு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாயில் கொண்டு வந்து பயன்படுத்தப்படுகிறது.

நீர்த் தோட்டம், பாலைவனத் தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என 23 விதமான தோட்டங்கள். 453 கார்கள், 10 பேருந்துகள், 1000 இருசக்கர வாகங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் சேகரிப்பு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story