மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் பருவமழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி மாலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பியது.

அணை நிரம்பிய நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக அணையின் உபரி நீர் போக்கையான 16 கண் மதகுகள் வழியாக அன்று இரவு முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

அதாவது அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 92 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

இதனால் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரவில் இந்த நீர்வரத்தானது வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

1 More update

Next Story