வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு: 19-ந்தேதி வரைவு பட்டியல் வெளியீடு

கோப்புப்படம்
வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ந்தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
எஸ்.ஐ.ஆர். களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந்தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.






