“தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி..” - மக்கள் சந்திப்பில் விஜய் ஆவேசம்
நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டேன் என்று மக்கள் சந்திப்பில் விஜய் கூறினார்.
காஞ்சிபுரம்,
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.
காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்கள் நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சிபுரம் மாவட்டம்தான்.
60 வருடத்துக்கு முன்பு கட்டியது தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம். இன்னும் அதை புதுப்பிக்கவில்லை. கேட்டால் அந்த இடத்தில் வழக்கு உள்ளது என்பார்கள். அரசாங்கத்தால் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தர முடியாதா? அவர்களுக்கு மக்கள் குறித்து சிந்திக்க நேரமில்லை. வாலாஜா பாத் அருகில் அவளூர் ஏரி உள்ளது. அங்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
இதே காஞ்சிபுரத்தில் தான் பரந்தூர் விமான நிலையம் கட்டும் பிரச்சினை உள்ளது. இதில் நாங்கள் விவசாயிகள் உடன் நிற்போம். அதில் சந்தேகம் இல்லை. அரசு இதிலிருந்து தப்பிக்க முடியாது. சட்டசபை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெகவை தான் ஆட்சியாளர்கள் குறிவைக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால்.. வருவோம்.. மக்கள் நம்மை வரவேற்பார்கள்.
நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக நாம் எல்லா நல்லதையும் செய்ய வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக, மனப்பூர்வமாக, அங்கீகாரத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம்.

நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்கிறார். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? சி.ஏ.ஏ. அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு சேர்க்க கூறியும், அதற்கு இடைக்கால தீர்வு கூறிய நமக்கு கொள்கை இல்லையா? சமத்துவம் சம வாய்ப்பு வழங்க கோரிய நமக்கு கொள்கை இல்லையா?
நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா?
கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதைப் பார்த்து நாடே.. (வாய் மூடி சைகை காட்டி சிரிக்கிறார்) .. பாப்பானு ஆசையா, பாசமா, சாப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி.. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.

ஆட்சிக்கு வந்தால்... விஜய் வாக்குறுதிகள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வந்தால் என்ன.. கண்டிப்பாக வருவோம்.. தவெக ஆட்சிக்கு வந்தால் பல சீர்திருத்தம் அமலுக்கு வரும். தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை. அனைவருக்கும் நிரந்தரமான வீடு, இருசக்கர வாகனம், வீட்டுக்கொரு பட்டதாரி இருக்கும் வகையில் கல்வி சீரமைப்பு. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், உண்மையான பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்படும்.
மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்.
நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்.
தவெக தொண்டர்களை தற்குறி என்கிறார்கள்.. தவெகவினர் தற்குறிகள் கிடையாது.. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள்.. அரசியல் மாற்றத்திற்கன அறிகுறி.. இந்த தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போறாங்க..
தவெகவிற்கு சப்போர்ட் பண்றவங்களை தற்குறிகள்னு சொல்லிகிட்டு இருந்தவங்க, இப்போ ‘தற்குறி கிடையாது. சங்கிகள் கிடையாது, அப்படி கூப்பிடாதீங்கனு' அவங்க எம்எல்ஏவே பேசியிருக்கிறார். அவர் யாருன்னா நம்ம கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்மாளின் சொந்தக்காரர்.
விஜய் எதையும் சொல்ல மாட்டான்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டான். ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு பீல் பண்ணப் போறீங்க..
மற்றவர்களைப் போல் சும்மா பேசிவிட்டு ஏமாற்றும் வேலை எல்லாம் இங்கு கிடையாது. நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான். எங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.









