விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்..? யாருக்கு சாதகம்..? - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.
இந்த நிலையில், பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து ஆய்வின் மூலம் மக்கள் மத்தியில் கருத்து கணிப்பை நடத்தியது. அதாவது, தமிழகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது?, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்?, அது யாருக்கு சாதகம்? என்றெல்லாம் ஆய்வு நடத்தப்பட்டன. இதில் பல அதிர்ச்சி கலந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு கடந்த முறையைவிட வாக்கு சதவீதம் குறையும் என்றாலும் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அங்கம் வகித்த இந்தியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தக் கூட்டணிக்கு பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 52 சதவீதமாக உயர்ந்த வாக்கு சதவீதம், தற்போதைய கருத்து கணிப்பில் 48 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல், 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியே போட்டியிட்டு மொத்தம் 41 சதவீத வாக்குகளை பெற்றிருந்தன. கடந்த பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 21 சதவீதமாக குறைந்த நிலையில், தற்போது 37 சதவீதமாக வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறது.
பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது 12 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 7 சதவீதமாக சரிந்தது. தற்போது, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்து போனாலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது, தி.மு.க. ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பவர்கள், நடிகர் விஜய் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் வாக்குகளும் இதேபோல் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இப்போது நடந்தால் தி.மு.க. கூட்டணிக்கு 36 இடங்களும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் பார்க்கும்போது, நாடாளுமன்ற தேர்தல் இப்போது நடந்தால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 324 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 208 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.