புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி விஜய் சாலை வலம்: அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு

புதுச்சேரியில் சாலை வலமாக சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் இறங்க இருக்கிறது.
இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினார். இதில், கட்டுக்கடங்காத கூட்டம் வந்த நிலையில், கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் சந்திப்பு இயக்கத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், கடைசியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் அரங்க நிகழ்ச்சியாகவே நடந்தது. இதில், 2 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், டிசம்பர் 5-ந் தேதி புதுச்சேரியில் சாலை வலமாக (ரோடு ஷோ) சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இதற்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் சாலை வலத்திற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பான அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் கழகத் தலைவர் விஜய் அவர்கள் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம். தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வருகை பரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கீழ் கண்ட இடத்தில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார் ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: 05.12.2025, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
தலைவர் உரையாற்றும் இடம்: உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






