பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவருக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5-ந் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், மேசையில் முன் வைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார்.
கோவையில் நடந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் எம்.ஜி.ஆர் என்னை மனதார பாராட்டினார். கோபிசெட்டிபாளையத்திற்கு பதில் சத்தியமங்கலத்தில் போட்டியிட எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார்.
ஆன்மீகவாதிகளும் திராவிட தலைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமை ஜெயலலிதா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுக-விற்கு பல்வேறு சோதனைகள் வந்தன; இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே.
அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதால் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். முன்னாள் முதல்-அமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சிதலைவரை சசிகலா முதல்-அமைச்சராக முன்மொழிந்தார்.
2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது. 2024-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார்.அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும்.
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் இணைத்தால்தான் வெற்றி பெற முடியும் 6 அதிமுக மூத்த தலைவர்கள் இபிஎஸ்-ஐ சென்று சந்தித்தோம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் கருத்து சொல்லவில்லை. ஆனால் அவரே 2009-ல் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்...அது உங்களுக்கு தெரியுமா?
அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன். இபிஎஸ் மனநிலை என்ன எனக்கு தெரியாது. என் மனநிலை, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இபிஎஸ்-ன் சுற்றுப்பயணத்தில் பங்குகொள்ளவில்லை
அதிமுகவில் யார், யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். இயக்கத்திற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்; அதற்காக தான் எனது பணிகளை தொடங்கியுள்ளேன்.
2010, 2016-ல் கூட்டணியை வலிமையாக்க ராஜதந்திரத்தோடு செயல்பாட்டார் ஜெயலலிதா; அதேபோல இன்றும், அமைதியாக இருப்பவர்களை சகோதரப்பாசத்தோடு இணைத்து செயல்படுத்தினால்தான் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்கவில்லை என்றால் நாங்களே ஒன்றிணைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.