விஏஓ கொடூர கொலை.. சிக்கிய திருநங்கைகள்.. வெளியான அதிர்ச்சி உண்மைகள்

வல்லம் கிராம நிர்வாக அலுவலராக ( விஏஓ) ராஜாராமன் பணிபுரிந்தவர்.
நாகை,
நாகை செல்லூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் தலையில் ரத்தக்காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கீழ்வேளூர் அருகே வாழக்கரை மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாராமன்(வயது 38) என்பதும், அவர் வல்லம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் என்பது தெரிய வந்தது.
ராஜாராமன் பணியில் இருந்தபோது கடந்த 2024-ம் ஆண்டு பட்டா மாறுதலுக்காக ரூ.1000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நாகை கோர்ட்டில் ராஜாராமன் ஆஜாராகி உள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிணமாக கிடந்த ராஜாராமனின் அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது. இதனால் ராஜாராமன் கல்லால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமனை கொலை செய்தது யார்? எதற்காக அவர் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார்?. இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், ராஜாராமன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்தவர்களை கைது செய்யும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என ராஜாராமன் உறவினர்கள் தெரிவித்தனர். எனவே அவரது உடல்பிரேத பரிசோதனைக்கு பிறகு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அன்று இரவு ராஜா ராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். ராஜாராமன் செல்லூரில் மது போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






