ரூ.4.58 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை கன்னிமாரா நூலகத்தினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை கன்னிமாரா நூலகத்தினை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
“நூலகம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதற்குமான பல்கலைக்கழகம், நூலகங்கள் தான் அறிஞர்களை உருவாக்கும் தொழிற்சாலைகள்” என்பது பேரறிஞர் அண்ணா தெரிவித்த பொன்மொழியாகும்.
சென்னை கன்னிமாரா பொது நூலகம் 1890 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த பாபி ராபர்ட் பாரன் கன்னிமாராவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 129 ஆண்டுகள் கடந்து 130 வது ஆண்டில் தடம் பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணாவால் “கன்னிமாரா நூலகம் என்னை கனிய வைத்த தாயகம்” என்று போற்றப்பட்ட சிறப்பு மிக்க நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
கன்னிமாரா பொது நூலகம் தமிழநாட்டின் முதல் பொது நூலகமாகவும் மாநில மைய நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது, இந்நூலகம் புத்தக ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், போட்டிதேர்வு மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது.
இந்நூலகத்தின் கட்டிடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது, இங்கு 1553 ஆம் ஆண்டு வெளியான நூல் முதல் மிக பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு, நூல்கள் மற்றும் நாளிதழ்கள் விநியோகச் சட்டத்தின்படி (Delivery of Books and Newspapers Act – 1954) இந்தியாவிலுள்ள நான்கு தேசிய நூலகங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும் சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆகிய நூலகங்களுக்கு நூல் பதிப்பாளர்கள் மற்றும் நாளிதழ்கள் பதிப்பாளர்கள் அனைவரும் தங்கள் வெளியீடுகளை இலவசமாக ஒரு பிரதி அனுப்பி வைக்க வேண்டும். இச்சட்டத்தின்படி பெறப்பட்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, உருது, பெங்காலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த நூலகத்தில் 9.5 லட்சம் நூல்களும், 1.50 லட்சம் உறுப்பினர்களும் உள்ளார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 500 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வு மாணவர்கள் உள்பட 1,000 மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிகிறார்கள். இங்கு போட்டித் தேர்வு மாணவர்கள் பயன் பெரும் வகையில் இணையதள வசதி, இலவச Wi-Fi வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூலகத்தின் நூற்றாண்டை போற்றும் வகையில் கட்டப்பட்ட நூற்றாண்டு விழா கட்டடத்தை 12.9.1997 அன்று அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார்.
நூலகத்தின் புராதான கட்டடத்தின் நிலையை சிறப்பித்து மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சரும் இன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 22.11.2006 அன்று திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் நாளிதழ் பருவஇதழ் பிரிவு , குடிமைப்பணி பிரிவு, மொழிப்பிரிவுகள், நூல் இரவல் வழங்கும் பிரிவு, நூல்கள் மற்றும் நாளிதழ்கள் விநியோகச் சட்ட நூல்கள் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், புதுப்பிக்கப்பட்ட குடிமையியல் பிரிவு, மின்தூக்கி வசதி , சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டு கூடம் ஆகியவற்றுடன் கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.1.2026) சென்னை எழும்பூரில் 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் மையம், மின்தூக்கி வசதி, சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டு கூடம், நவீன சிறுவர் நூலகம், குடிமையியல் பிரிவு ஆகிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.சந்தரமோகன், பொது நூலகத்துறை இயக்குநர், ச.ஜெயந்தி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






