ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 17) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.