காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு - பெரம்பலூரில் சோகம்

கோப்புப்படம்
பெரம்பலூரில் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் அகிலன் என்ற மகன் உள்ளார். மேலும் இந்த தம்பதிக்கு 11 மாதங்களுக்கு முன்பு ரேஷ்மா, தனுஶ்ரீ என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனலட்சுமி தனது குழந்தைகளுடன் அவரது தாய் சாந்தியுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ரேஷ்மா மற்றும் தனுஶ்ரீ இருவரும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தனலட்சுமி தனது தாயுடன் சேர்ந்து, நேற்று குழந்தைகளை நாட்டு வைத்தியம் செய்யும் பெண் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் கொடுத்த நாட்டு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்ததும், ரேஷ்மா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து மற்றொரு குழந்தையான தனுஶ்ரீயை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தையும் உயிரிழந்தது.
இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.