‘நாளைய முதல்வர்... மக்களின் முதல்வர்’ - திருமாவளவனை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள்

எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பனையூர் பாபு, ஆளூர் ஷானவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ‘தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் ஒரு கோடி பேர் தங்களுடைய வாக்குரிமையை பரிகொடுக்கும் நிலை ஏற்படும் என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மத்திய பா.ஜனதா அரசு உள்நோக்கத்தோடு பயன்படுத்துகிறது என்று கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனை வரவேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் ‘நாளைய முதல்வர்', ‘மக்களின் முதல்வர்', 'களத்தில் முதல்வர்', 'சமகால முதல்வர்' போன்ற வாக்கியங்கள் அடங்கிய வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையில் கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘நான் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருக்கிறேன்’ என்று கூறினார். இந்த கருத்தை அவரது தொண்டர்கள் வரவேற்றனர். இதனால், தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே சற்று கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்பட்டது.






