இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Dec 2025 1:33 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 16 Dec 2025 1:17 PM IST
“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..” - மதுரை ஐகோர்ட்டில் வக்பு வாரியம் தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது.
- 16 Dec 2025 1:00 PM IST
வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
- 16 Dec 2025 12:38 PM IST
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 16 Dec 2025 12:36 PM IST
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி; அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
- 16 Dec 2025 12:33 PM IST
ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10 சதவீதத்திற்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். .
- 16 Dec 2025 12:18 PM IST
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டை ஏற்க டெல்லி கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
பண முறைகேடு குறித்து முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலேயே அமலாக்கத்துறையால் விசாரிக்க முடியும் என்றும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு, தனியார் புகார் அடிப்படையிலானது என்றும், முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
- 16 Dec 2025 12:09 PM IST
வரைவு வாக்காளர் பட்டியல்.. மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
போலி வாக்காளர்கள், வேறு இடங்களுக்கு குடியேற்றம், மரணம் அடைந்தவர்கள் என பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.
- 16 Dec 2025 12:07 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை - 1,000 போலீசார் பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (புதன்கிழமை) வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- 16 Dec 2025 12:04 PM IST
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 85,531 வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார். அதில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 10.05 சதவீதம் என 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 14.151 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 22,776 பேர். நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் 45.312 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
















