இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025
x
தினத்தந்தி 29 Dec 2025 9:26 AM IST (Updated: 29 Dec 2025 2:02 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 29 Dec 2025 2:02 PM IST

    ‘கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ - டி.டி.வி.தினகரன்

    திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து ஒரு தலைவரை வேண்டுமானால் வழிக்கு கொண்டு வர முடியும், ஆனால் தொண்டர்கள் கேட்பார்களா?

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோதும், அந்த கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகும் சில கட்சிகள் எங்களை அணுகி, அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசி வருவது உண்மைதான். கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

  • 29 Dec 2025 1:04 PM IST

    அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து - விமானி உயிரிழப்பு

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.  இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  • 29 Dec 2025 1:01 PM IST

    எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: விஜய் மீது செல்லூர் ராஜு சாடல்

    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது;

    "நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எங்களை களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம். நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம். விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுளார் ? அவருக்கு என்ன பின்புலம் ? . நடிகர்களுக்கு ரசிகர்கள் கூடுதலாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர்.ஆக முடியாது. எம்.ஜி.ஆர். என்பவர் ஒருவர் தான்." என தெரிவித்தார்

  • 29 Dec 2025 12:59 PM IST

    மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ் அய்யர்

    அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாட உள்ளார். அதற்கு முன் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹாசரே கோப்பை தொடரில் விளையாடுகிறார்.

  • 29 Dec 2025 12:52 PM IST

    சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது;

    ஐயாவின் ஆட்டத்தை இனிதான் பார்க்கப்போகிறீர்கள். 2026 தேர்தலின் பாமக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். 2026 தேர்தல் வியூகத்தை ஐயா வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி, யாருக்கு சீட் என ஐயாவுக்கு தெரியும். 25 எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு செல்வோம். ஆட்சியில் பங்கு பெறுவோம்.”

    இவ்வாறு அவர் கூறினார். 

  • 29 Dec 2025 11:53 AM IST

    சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது

    சென்னை மெரினா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.

    எனினும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் மெரினா கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

  • 29 Dec 2025 10:52 AM IST

    துணை ஜனாதிபதி வருகை: ராமேஸ்வரத்தில் டிரோன்கள் பறக்க தடை

    காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். 

    இந்த நிலையில், துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

  • 29 Dec 2025 10:50 AM IST

    மெக்சிகோவில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 13 பேர் உயிரிழப்பு

    மெக்சிகோ நாட்டின் இண்டர்ஓஷெனிக் ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே ரெயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

  • 29 Dec 2025 9:46 AM IST

    இன்றைய தங்கம் விலை

    இந்த நிலையில், 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்றைய வெள்ளி விலை

    தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து 2,76,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து 276க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story