திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு; விசாரணையை தொடங்கியது சிபிஐ

சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளி கோயில் காவலாளி நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக மதுரை ஐகோர்ட் கிளை நியமனம் செய்தது இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி கடந்த 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து விசாரணை நடத்த ஏதுவாக, விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நாளை டெல்லியில் இருந்து விமானம் மதுரை வருகிறார்கள். வழக்கின் விசாரணை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.