புலிகள் கணக்கெடுப்பு பணி 5-ந்தேதி தொடக்கம்

கோப்புப்படம்
புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்களுக்கு வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை,
நாட்டின் தேசிய விலங்கான புலிகள் கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன விலங்குகள் நிறுவனம் ஆகியவை வனத்துறையுடன் இணைந்து நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 3,167 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் 264 புலிகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 5-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்டமும் 7 நாட்கள் சுழற்சி முறையில் வெவ்வேறு கோட்டங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மட்டும் இப்பணி கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, மேகமலை ஆகிய புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, திண்டுக்கல், கொடைக்கானல், தேனி, மதுரை, அம்பாசமுத்திரம், தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு அசனூர், தர்மபுரி, ஓசூர், கூடலூர், நீலகிரி, முக்கூர்த்தி, சேலம், நாமக்கல், ஆத்தூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள வனச்சரக பகுதிகள் மற்றும் புலிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
புலிகள் எச்சம், கால்தடம் போன்றவற்றை நவீன கண்காணிப்பு மூலம் பதிவு செய்யப்படும். புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட விரும்பம் உள்ள தன்னார்வலர்கள் வனத்துறை அலுவலகங்களில் தங்களது பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம் என்று வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






