“சாதி, மதத்தால் நாட்டை பிளவுபடுத்துபவர்கள் தான் தீயசக்தி” - வீரபாண்டியன் பேட்டி


“சாதி, மதத்தால் நாட்டை பிளவுபடுத்துபவர்கள் தான் தீயசக்தி” - வீரபாண்டியன் பேட்டி
x

தி.மு.க.வுடன் கூட்டணி வலுவாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் தொடுக்கக்கூடாது. இந்த திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதற்குரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

நடிகர் விஜய் தி.மு.க.வை பலமுறை தீய சக்தி என்று கூறுகிறார். சாதி, மதம் ரீதியாக நாட்டை யார் பிளவுபடுத்துகிறார்களோ, அவர்கள் தான் தீய சக்தி. மாறாக, ஜனநாயக சக்தியான தி.மு.க.வை தீய சக்தி என்று சொல்வதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கிறது. விஜய்யிடம் திட்டங்கள், கொள்கைகளை எதிர்பார்த்தோம், புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே அளிக்கிறது.

காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடக்கிறது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது. வருகிற 26-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு மற்றும் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 7-ந்தேதி மாநில அளவிலான நூற்றாண்டு நிறைவு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் 30, 40 தொகுதிகள் கேட்பதற்குரிய அரசியல் தார்மீகம் எங்களுக்கு உண்டு. 100 ஆண்டுகால அரசியல் எங்களுடையது. எத்தனை சீட்டு வேண்டுமானாலும் கேட்பதற்கு எங்களுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது. அவ்வாறு கேட்டாலும் ஜனநாயக விரோதமாக எங்களது கூட்டணி தலைவர் எடுத்துக்கொள்ள மாட்டார். சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story