திருப்பரங்குன்றம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடையில்லை - ஐகோர்ட் மதுரை கிளை


திருப்பரங்குன்றம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடையில்லை -  ஐகோர்ட் மதுரை கிளை
x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது தலைமை செயலாளர், ஏடிஜிபி ஆஜராக விலக்கு அளிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்றும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன

வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல் முபீன், ''தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தூண் அமைந்துள்ளது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்'' என்றார். அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், '' மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

1994 தீர்ப்பில் மேலே உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனக் கூறவில்லை. மாற்று இடத்தில் ஏற்றலாம் என பரிசீலனை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் - தர்கா தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, பேச்சுவார்த்தை விவகாரத்தில் தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் என மனுதாரர் தரப்பு பதில் அளித்தது. இதையடுத்து, மார்கழி பிறந்துவிட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360க்கும் மேலான நாட்கள் உள்ளன என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை; தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது தலைமை செயலாளர், ஏடிஜிபி ஆஜராக விலக்கு அளிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நேரில் ஆஜராக விலக்கு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை அணுகலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story