திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு உத்தரவுக்கு அர்த்தம் இல்லையா? - அண்ணாமலை கேள்வி

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால், தீபம் தற்போது வரை ஏற்றப்படவில்லை. கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கமிட்டு, தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்.
மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுக்கு அர்த்தம் இல்லையா என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சனாதன தர்மத்தின் மீதான திமுக அரசின் விரோதம் இனி விளக்கத்திற்குரிய விஷயமல்ல; அது உண்மை. இந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் மலையில் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் வகையில், கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.
இன்று, நூற்றுக்கணக்கான போலீசாரை நியமித்து, பக்தர்கள் மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், திமுக ஆட்சி அதன் திருப்திப்படுத்தும் அரசியலின் முழு அளவையும் அம்பலப்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். இந்த அரசுக்கு கோர்ட்டு உத்தரவு எந்த அர்த்தமும் இல்லையா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






