இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. `ப' வடிவில் மாறும் பள்ளி இருக்கைகள்

பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
பொதுவாக பள்ளி வகுப்பறை வடிவமைப்பானது ஆசிரியர்களுக்கு நேராக வரிசையாக பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்கும். அதில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர்வது பொதுவான ஒன்றாகும்.
இந்த நிலையில், பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை 'ப' வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை 'ப' வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.