'பொறுமைக்கும் எல்லை இருக்கிறது, அமித்ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக..' - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதல்-அமைச்சர் கூறுவதாக அண்ணாமலை பேசினார்.
சென்னை,
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
"பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதல்வர் கூறுகிறார். அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார் திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக மோடி பீகாரில் பேசினார். தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, ஆ.ராசா போன்றவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரோனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போகணும். இல்லையென்றால் ஆட்சியை கலைத்துவிடுங்கள்.
பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. அதிமுகவில் சிலர் என்னை திட்டிக்கொண்டு உள்ளனர். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இன்று நான் அதிமுகவைப் பற்றி பேசுவதில்லை. ஆனால், அதிமுகவில் இருக்கும் சில தலைவர்கள் இன்றும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். நான் திரும்ப பேச 2 நிமிடங்கள் போதும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கட்டுப்பட்டு நிற்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் நாங்கள் அனைவரும் இருக்கிறோம். அதற்கான நேரமும், காலமும் இன்னும் உள்ளது. அமித்ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியல் கொடுக்கக்கூடிய கூட்டணி உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் யார் இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. நான் ஒரு சாதாரண தொண்டன். புடிச்சிருந்தா இருக்கப் போறேன். இல்லைனா கிளம்பப் போறேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.






