"பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ..." - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
கோவை,
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுகிறார்கள்.
மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
தாமதமாக வேளாண் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். புட்டபர்த்தி விழாவுக்குச் சென்றதால் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது. நான் மேடை ஏறும் போது பல விவசாயிகள் தங்களது மேல்துண்டை சுழற்றிக் கொண்டு இருந்தனர். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ? என்று என் மனம் அலாவியது.
எனக்கு சிறு வயதில் தமிழ் சொல்லித் தரப்பட்டிருந்தால் உங்களுடன் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் விவசாயிகள் பேசியதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. பி.ஆர். பாண்டியன் பேச்சு அருமையாக இருந்தது. தமிழ் புரியாவிட்டாலும் அவரது உணர்வு புரிய வைத்தது. பி.ஆர்.பாண்டியன் உரையை இந்தியில் எனக்கு அனுப்புங்கள்.
இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இயற்கை வேளாண்மை என்பது இந்த நூற்றாண்டின் தேவை. அதிநவீன ரசாயனம் நம் மண்ணின் வளத்திற்கு கேடு. இதனால் செலவீனமும் அதிகரித்து வருகிறது. பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. 11 ஆண்டுகளில் வேளாண் தொழில்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. வர இருக்கும் ஆண்டுகளில் வேளாண் துறையில் மாறுதல்கள் இருக்கும். நம்முடைய சூப்பர் உணவுகள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும்.
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணையும் படைக்கிறோம். தமிழ்நாட்டில் கம்பு, சாமை காலங்காலமாக உள்ளது. நமது உணவு பட்டியலில் சிறுதானியங்கள் உள்ளன. ஒரு பயிர் வேளாண்மையிலிருந்து ஊடுபயிர் சாகுபடி முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும். இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதாகைகளுடன் நின்ற சிறுமிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தான் பட்டம் பெறும்போது இந்தியா 2வது பொருளாதார வல்லரசாக மாறியிருக்கும். நான் ஓய்வு பெறும் போது உலகின் நம்பர்.1 பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என பதாகையை சிறுமிகள் வைத்திருந்தனர். இந்நிலையில் உங்களது தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி என பதாகைகளுடன் நின்ற சிறுமிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.






