வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்


வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
x

கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பாதுகாப்பதில் தி.மு.க. அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை

சென்னை, வியாசர்பாடி, அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூ.55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோவில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி தருவதிலும், திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பாதுகாப்பதிலும் முனைப்போடு செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூ.55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தினை இன்றைய தினம் திறந்து வைத்துள்ளோம். இத்திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் திருக்கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை மட்டம் உயர்ந்த காரணத்தினால் இத்திருக்கோவில் 5 அடி தாழ்வாக இருந்த நிலையில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் சுவாமி, அம்பாள் சன்னதிகள், மகா மண்டபம், நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் போன்றவற்றை சாலை மட்டத்திலிந்து 8½ அடி உயர்த்திட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இத்திருக்கோவிலின் திருக்குளமானது ரூ.87.90 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் எண்ணற்ற திருப்பணிகளை மேற்கொண்டு ஆன்மிக அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story