முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு: இன்று முதல் 12 நாட்கள் நடக்கிறது

அணை பலமாக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
சென்னை,
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி நடக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், பாசனத்திற்கு போக உபரியாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பணிகளும் நடக்கிறது.
அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றறை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள மாநில அரசும், சில தன்னார்வ அமைப்புகளும் கூறி வருகின்றனர்.
இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அணை பலமாக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறி உள்ளனர். அணையை மத்திய கண்காணிப்பு குழு கடந்த நவம்பர் 10-ந் தேதி ஆய்வு செய்தது. மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு செய்ய இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.
தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம், அணையில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
14 ஆண்டுகளுக்கு பின்னர் 2-வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக நீர்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பில் நடக்கும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) அணையில் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடக்க உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை இந்த ஆய்வு நடக்க இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.






