‘மாபியா போல் செயல்படும் மணல் கொள்ளை கும்பல்’ - ஐகோர்ட்டு காட்டம்


‘மாபியா போல் செயல்படும் மணல் கொள்ளை கும்பல்’ - ஐகோர்ட்டு காட்டம்
x

5 லட்சம் ரூபாய் மட்டும் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

கனிமவள கொள்ளை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கனிமவளத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “மணல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருதி பொறுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு, அது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், “எத்தனை வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 5 கோடி ரூபாய்க்கு கனிமவளம் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படும் சூழலில், 5 லட்சம் ரூபாய் மட்டும் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது?” என கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசியல் மற்றும் பணபலம் மூலம் மாபியா போல் மணல் கொள்ளை கும்பல்கள் செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் பொறுப்பு என்றும், இது தொடர்பாக புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மணல் மற்றும் கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

1 More update

Next Story