தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் நடைபெற்று வருகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனங்களை முன்வைத்து உள்ளார். ஆர்.என்.ரவி கூறியதாவது:
கல்வி வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. உதகை வரை வந்த ஒரு துணை வேந்தர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது. துணை வேந்தர்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறை மிரட்டியுள்ளது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் அதிக அளவு துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் கல்வியின் தரம் மோசமாக உள்ளது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக உள்ளது. நேரில் நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே இந்த மாநாட்டை நடத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
உதகையில் நடைபெறும் மாநாட்டுக்கு 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் 32 பேர் கலந்து கொண்டனர். அதே சமயம் அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மட்டும் பங்கேற்றார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவர் மற்றும் கவர்னர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை முன்னிட்டு ராஜபவன் மாளிகை மற்றும் தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.