தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - சீமான்


தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - சீமான்
x

கோப்புப்படம் 

விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்ற மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், அலியாளம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் வலதுபுறத்தில் 9 கி.மீ தொலைவிற்குக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிற்கு அக்கால்வாயை நீட்டிப்புச் செய்து, சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால் வெட்ட வேண்டுமென்று கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் இதுவரை தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுத்துவருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்களால் கடந்த 2010-ம் ஆண்டு தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் தொடர்ச்சியாகக் கோரிக்கையையும் உழவர் பெருமக்கள் முன்வைத்தனர். அதுமட்டுமின்றி, 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்பகுதி கிராம மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் அளிக்கப்பட்டது. பின்னர் தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்புகள் பல்வேறு வடிவிலான அறவழி போராட்டங்களையும் நடத்தியும் தமிழ்நாடு அரசு கிளை வாய்க்கால் அமைக்க முன்வரவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இத்திட்டத்தின் அவசியம் குறித்த விரிவான விளக்கத்துடன் கூடிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாநகரில் மாபெரும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மீண்டும் மனு அளிக்கப்பட்டதுடன், அதே ஆண்டு நவம்பர் மாதம் ராயக்கோட்டையில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடைபெற்றது. அதில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாக அரசு அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

அதன்பிறகு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி திடலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, முதற்கட்ட ஆய்விற்கான நிதியையும் ஒதுக்கினார். அதனைத் தொடர்ந்து திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு "Life Shell Labs India Private Limited" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு 3 (3)-ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு அரசால் 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 14.02.21 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதே ஆண்டு ஒப்பந்த ஏல அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 18-01-21 அன்று தூள்செட்டி ஏரியில் கிராமசபைக் கூட்டம் நடத்தி, கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, கடந்த 2023-ம் ஆண்டுதான் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின் இன்றுவரை அத்திட்டம் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் முடங்கிக்கிடக்கிறது என்பதுதான் மிகப்பெரிய கொடுமையாகும்.

ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாகியும் நிலம் வழங்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத தி.மு.க. அரசு, அதையே காரணம் காட்டி கிளைவாய்க்கால் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பாகக் கடந்த 29.06.25 அன்று ராயக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தபோதும், தி.மு.க. அரசு அதனை அலட்சியப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற மறுத்துவருவது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.

பரந்தூரில் விளைநிலங்களை அழித்துப் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்குப் பல நூறுகோடிகளைக் கொட்டி அவசர அவசரமாக நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த முனையும் தி.மு.க. அரசு, அதில் காட்டும் ஆர்வத்திலும், வேகத்திலும் ஆயிரத்தில் ஒரு பங்காவது வேளாண்மையை வளர்க்கும் விவசாயிகளை வாழ்விக்கும் திட்டமான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் காட்டாதது ஏன்? வேளாண்மையை அழித்து, விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் தி.மு.க. அரசு வேளாண்மையை வளர்க்கும் முறையா? என்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர்களின் பதிலென்ன?

ஆகவே, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அம்மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை இனியும் கால தாமதம் செய்யாமல் விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story