பரபரக்கும் அரசியல் களம்.. எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி.. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!


தினத்தந்தி 7 Jan 2026 9:46 AM IST (Updated: 7 Jan 2026 12:05 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. மேலும் அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி - அன்புமணி சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர். பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து அன்புமணி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23-ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பா.ம.க. வென்றிருந்தது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது பா.ம.க. இதனைத்தொடர்ந்து பாமக-அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது .

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.

அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்புமணி தரப்பு கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story