குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

கோப்புப்படம்
தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை, ஆண்டாண்டு காலமாகத் தூக்கத்தில் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகம் முழுவதும், மாநகரங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கப் பெறாமல், அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை, ஆண்டாண்டு காலமாகத் தூக்கத்தில் இருக்கிறது. பல ஆண்டு காலமாக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு, ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, அதில் பாதியளவே ஊழியர்களுக்கு, கையில் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர் உரிமைகளான, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, முறையான போனஸ், இழப்பீட்டுத் தொகை என எவையும் வழங்கப்படுவதில்லை. வருடம் 365 நாட்களும், தினமும் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை பணி செய்யும் கட்டாயத்துக்கு, ஒப்பந்த ஊழியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இது தவிர, இந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ளதன்படி ESI, EPF உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. ஊதியத்திற்கான பற்றுச் சீட்டு வழங்கப்படுவதில்லை. வழங்கப்படும் ஊதியம், மாதக் கணக்கில் காலதாமதமாக வழங்கபட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பாரதிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, பலமுறை தமிழக அரசு, அமைச்சர்கள், இரண்டு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அமைச்சகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் என அனைத்துத் தரப்பிலும் கோரிக்கை எழுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை அடுத்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்களிடம் அரசு அதிகாரிகள் பலமுறை கேள்வி எழுப்பியும், அதனை அவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றவும் மறுத்து வருகிறார்கள். இதனால், அரசு இயந்திரத்தை விட, இந்த ஒப்பந்ததாரர்கள் அத்தனை வலிமையானவர்களா என்ற கேள்வி எழுகிறது.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதும் ஆகும். தொழிலாளர் நலச்சட்டத்தின்படி, வார விடுமுறை, பண்டிகைக் கால விடுமுறைகள், ESI, PF, போனஸ் உள்ளிட்ட அடிப்படை பலன்களை வழங்காமல் இருப்பது அப்பட்டமான விதிமீறலுமாகும். அத்தோடு மட்டுமல்லாமல் ரூ.5,000 க்கும் மேற்பட்ட பணப் பறிமாற்ற நடவடிக்கைகள், வங்கிக் கணக்கின் மூலமே நடைபெற வேண்டும் என்ற அரசாணையும் பின்பற்றப்படுவதில்லை.
அனைத்திற்கும் மேலாக இந்த அனைத்து விதிகளையும் பின்பற்றுவோம் என்று ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்ததாரர்கள், இவை எதையும் பின்பற்றாமல் இருப்பது, ஒப்பந்த மீறல் மட்டுமின்றி, அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்வதற்கும் போதுமான முகாந்திரம் இருப்பதாகும்.
இந்த ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத்தை மீறியும், அதிகாரிகளை மதிக்காமலும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட வழங்காமல் இத்தனை தைரியமாக இருப்பதற்குக் காரணம், இவர்களின் பின்புலத்தில், இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய தி.மு.க. அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற மேலாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்தப் பிரச்சினை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்ல, சேலம், கோவை, சென்னை என தமிழகம் முழுவதுமே பரவலாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அதனை தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தின் ஒரு பகுதி எங்கெல்லாம் செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. நாம் தற்போது 2025-ம் ஆண்டில் இருக்கிறோம். இந்தக் காலத்திலும், பணியாளர்களுக்கான ஊதியம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல், கையில் ரொக்கமாகக் கொடுக்கப்படுகிறது என்றால், அது தி.மு.க. அரசின் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஊதியமாகத்தான் இருக்கும். இதன் பின்னணியில், ஒப்பந்ததாரர்களும், தி.மு.க. அரசும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் மாபெரும் ஊழல்தான் காரணமாக இருக்க முடியும்.
ஒரே ஒரு நாள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், அதனால் பாதிக்கப்படப்போவது, ஒட்டு மொத்த தமிழக மக்களே. இந்த ஊழியர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதை விட்டுவிட்டு, அவர்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருப்பதும், மாநில அரசே. அப்பட்டமான சட்ட மீறலுக்குத் துணை செல்வதும் என்ன நியாயம்?
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளான
1. ஒப்பந்தப்படி, குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயம் செய்த ஊதியத்தை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது
2. ESI, EPF உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவது
3. வார விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் வழங்குவது
4. தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு வழங்குவது
5. தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவது
6. முறையான போனஸ் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்குவது
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து தற்போது வரையிலான சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்றும், அதிகாரிகள் அறிவுறுத்தியும், ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இது யாரோ ஒரு சிலர் மட்டும் பாதிக்கப்படுவது அல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது என்பதை தி.மு.க. அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தி.மு.க. அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.