எங்களுக்கு வேற வழி தெரியல.. முதல் - அமைச்சர் சார்தான் உதவி பன்னணும்.. கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை


எங்களுக்கு வேற வழி தெரியல.. முதல் - அமைச்சர் சார்தான் உதவி பன்னணும்.. கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Dec 2025 3:56 PM IST (Updated: 8 Dec 2025 3:56 PM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா, 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.

சென்னை,

7-வது கேரம் உலகக் கோப்பை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை மாலத்தீவில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றனர். இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

அந்த வகையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்க பதக்கம் வென்று அசத்தினார். மற்றொரு தமிழக வீராங்கனை காசிமா தலா ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றார்.

பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, வீரர் அப்துல் ஆசிப் ஆகியோர் நேற்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கீர்த்தனா அளித்த பேட்டியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு உதவியதன் மூலமே தான் போட்டியில் பங்கேற்று ஜெயித்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில் தங்களுக்கு வீடு கட்ட முதல் - அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று கீர்த்தனாவின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வீட்டு வேலை செஞ்சிதான் என் பொண்ணோட கனவ நிறைவேத்துனேன்.. இன்னைக்கு நாட்டுக்காக தங்கம் ஜெயிச்சிருக்கா.. ஆனா நாங்க ஒழுகுற வீட்டுல இருக்கோம்.

இந்த வீட்டுலதான் நாலு பேர் இருக்கோம். படுக்கவும் இடம் இல்ல சார். என் மகள் வென்ற பதக்கங்களை கூட வைக்க இடமில்லை.

எங்களுக்கு முதல் - அமைச்சர் சார் வீடு கட்ட உதவி பண்ணா நல்லாருக்கும். எங்களுக்கு வேற வழி தெரியல சார்’’ என்று கோரிக்கை வைத்தார்.

1 More update

Next Story