விவசாயிகளுக்கு விரோதமான விதை மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை

விதைகளில் போலியானது, தரமற்றது எது என்பதை எப்படி முடிவு செய்யப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ இந்த புதிய விதை மசோதா தடை செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய விதை வாங்கி, பயிர் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விதைகள் மசோதாவை பொறுத்தவரை ஒவ்வொரு விற்பனையாளரும் விதைகள் குறித்து பதிவு சான்றிதழை ஒன்றிய - மாநில அரசுகளிடம் பெற்ற பிறகு தான் விதைகளை விற்கவோ, ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ, தனிப்பட்ட நபருக்கு வழங்கவோ முடியும் என்கிற வகையில் இந்த மசோதா பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. விற்பனை செய்யப்படும் விதைகள் க்யூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி விதைகளை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும், மாற்றிக் கொள்ளவும், வணிக இலச்சினை இல்லாமல் விற்பனை செய்து கொள்ளவும் விவசாயிகளுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உள்ளுர் விதை ரகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உரிமைகள் வழங்கப்பட்டன. இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 2019 இல் இதே விதை மசோதா கொண்டு வரப்பட்ட போது தான் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பதை எப்படி முடிவு செய்யப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை உடனடியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.






