ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போகும் ஜவுளி பூங்கா

ஜவுளிப்பூங்கா 1,052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,894 கோடி செலவில் பிரமாண்டமாக உருவெடுக்க இருக்கிறது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அங்கு உருவாக்கப்படும் வேலைவாய்ப்பில்தான் இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு, அதை பெறுபவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றும். அந்தவகையில், மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது நாட்டில் 7 இடங்களில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்கா என்று அழைக்கப்படும் பி.எம். மித்ரா பூங்காக்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதில், ஒரு பூங்காவை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட இருக்கும் இந்த ஜவுளிப்பூங்கா 1,052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,894 கோடி செலவில் பிரமாண்டமாக உருவெடுக்க இருக்கிறது. இந்த ஜவுளி பூங்கா அமைவதற்கு மிக சாதகமான அம்சம் என்னவென்றால் கோயம்புத்தூர்-தூத்துக்குடி வழித்தடத்தின் அருகில் ஏற்கனவே ராஜபாளையம், விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஜவுளி தொகுப்புகள் அமைந்துள்ளன என்பதுதான். இதனால் ஜவுளி பூங்காவுக்கு சாதகமான நல்ல சூழல் நிலவுகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களும் அந்த பகுதியிலேயே எளிதாக கிடைக்கும் வசதிகளும் இருக்கின்றன. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கிறது.
5 ஆண்டுகளில் முழுவடிவம் பெற இருக்கும் இந்த ஜவுளி பூங்காவில் அமையும் தொழிற்சாலைகள் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா வளாகம் 1,052 ஏக்கரில் உருவாக்கப்பட்டாலும், 600.83 ஏக்கரில்தான் அமைய இருக்கிறது. இங்கு தொழிற்சாலைகள் தொடங்க இப்போது சிப்காட் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை தொடங்க விரும்புகிறவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.55.32 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடையற்ற நீர் மற்றும் மின்சாரம் வழங்கப்படும். கழிவுநீர் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இருக்கும். மின்சார வசதிக்காக தனியாக துணை மின்நிலையம் அமைக்கப்படும். நவீன உட்கட்டமைப்பு வசதி இடம் பெறும். திறன் மேம்பாட்டு மையம், சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகம் இருக்கும். உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த கண்காட்சி மையம் அமைக்கப்படும் என்பது உள்பட பல வசதிகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்காவில் அமைய இருக்கும் தொழிற்சாலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக அனுப்ப 100 கிலோமீட்டர் தூரத்தில் தூத்துக்குடி துறைமுகமும், பிற மாநிலங்களுக்கு அனுப்ப அருகிலேயே ரெயில் நிலையமும், நல்ல சாலை வசதிகளும், ஆகாய மார்க்கமாக பொருட்களை எடுத்து செல்ல 50 கிலோமீட்டர் தொலைவில் மதுரை விமான நிலையமும் இருக்கின்றன. மொத்தத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஜவுளிப்பூங்காவை தொடங்க மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. இது விருதுநகருக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் விருது பெற்று தரும் என்பதில் ஐயமில்லை. இதுபோல தமிழ்நாடு முழுவதும் சாத்தியக்கூறு உள்ள இடங்களில் தொழில் பூங்காக்களை தொடங்கவேண்டும். அப்படி தொடங்கினால் வேலைவாய்ப்புகளும் பெருகும், முதலீடுகளும் அணிவகுத்து வந்து வாசல் கதவை தட்டும்.






