கேரளா செல்லும் தமிழக ஆம்னி பஸ்கள் 2-வது நாளாக எல்லைகளில் நிறுத்தம்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.
குமரி,
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கேரள மாநிலத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாக கூறி, தமிழக ஆம்னி பஸ்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை என ஒரே நாளில் ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்தார்.
இதற்கிடையே குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஏராளமான ஆம்னி பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று குமரி-கேரள எல்லையான களியக்காவிளை, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பஸ்களில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
அதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்கள் நேற்று காலை கோவையை அடுத்த தமிழக கேரள எல்லை பகுதியான வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது. ஆம்னி பஸ்களின் போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், கேரளா செல்லும் தமிழக ஆம்னி பஸ்கள் 2-வது நாளாக எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக தமிழக அரசும், கேரளா அரசும் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருகிற 13-ந்தேதி முதல் கேரளாவுக்கு சபரிமலை பக்தர்கள் அதிகம் செல்ல உள்ளநிலையில், இந்த பிரச்சினை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அபராத விதிப்பை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து கேரளாவுக்கு பஸ்களை இயக்க மாட்டோம் என்று தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.






