திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு

திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர்.
திருச்செந்தூர்,
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரைப்பகுதியை பலமாக மோதின. இதனால் கடற்கரையில் சுமார் 3 அடி தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலின் உள்ளே இருந்து அலையுடன் சுழற்றிக்கொண்டு வந்த கடற்பாசிகள் குவியல் குவியலாக கரையோரம் ஒதுங்கின.
இதனால் கடற்கரையோரத்தில் பச்சை பசேலென காட்சியளித்தது. எனினும் நேற்று காலையில் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.






