ஊட்டியில் கடும் குளிர் : உறைபனியால் மக்கள் தவிப்பு

உறைபனியால் குட்டி காஷ்மீராக ஊட்டி மாறியது. அங்கு வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக உள்ளது.
நீலகிரி,
ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிக்காலம் என்பதால் நீர்பனி மற்றும் உறைபனி காணப்படும். நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைப்பனி தொடங்கும். இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதமே நீர்பனி தொடங்கிய நிலையில், மழைப்பொழிவு இருந்ததால் உறைபனி தள்ளி போனது. மேலும் எப்போதும் ஊட்டியில்தான் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஊட்டியை அடுத்த மஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது.நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் உறைபனி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் கடும் குளிர் நிலவியது. அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், காந்தல் மற்றும் தலைக்குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூரை அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. தலைக்குந்தா பகுதியில் காணப்பட்ட உறைபனியால் பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போல் காட்சியளித்தன. பச்சை புல் மைதானங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்ட உறைபனி ரம்மியமாக காட்சியளித்தது. அதிகாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் உறைபனியை ஆர்வத்தோடு கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கார்கள் மீது விழுந்திருந்த உறைபனி வெள்ளை பஞ்சுகள் பதித்தது போல் காணப்பட்டது. இருசக்கர வாகன இருக்கைகள் மீதும் உறைபனி நிறைந்து இருந்தது. குளிர் பாதிப்பை சமாளிக்க பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், தலைக்குந்தா பகுதியில் தொடக்கத்திலேயே உறைபனி இந்த முறை வழக்கத்தை விட மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் கடும் குளிர் வாட்டுகிறது. காலை 10 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் குறைந்தவுடன்தான் பணிகளை தொடர முடிகிறது. இருந்தாலும், கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தாமதமாக தொடங்கியதால் இந்த ஆண்டு உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கும், அடுத்த ஒரு சில வாரங்களில் தேயிலை செடிகள் கருகிவிடும் என்றனர்.






