சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்: நயினார் நாகேந்திரன்


சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்: நயினார் நாகேந்திரன்
x
தினத்தந்தி 3 Dec 2025 3:00 AM IST (Updated: 3 Dec 2025 3:00 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை,

பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரை ஆதீன மடத்துக்கு நேற்று வந்து ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமாக ஆதீனத்தை சந்தித்தேன். இந்த சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் எங்கள் ஊர்க்காரர். தமிழகத்தில், கஞ்சா, போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த சூழலில் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்? எனவே தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும்.

இப்போது அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு தான். அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றுள்ளார். த.வெ.க.வில் ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். டி.டி.வி.தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்?.

என்ன பிரச்சினை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்கமாட்டார். நான் தற்போது பா.ஜனதா மாநில தலைவராக உள்ளேன். நாளை நான் அந்த பதவியில் இல்லாமல் இருக்கலாம். அதற்காக தனிக்கட்சி தொடங்க முடியுமா? நிச்சயமாக அவ்வாறு செய்ய மாட்டேன். அதே போல்தான் அண்ணாமலையும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story